திருப்பூர் | சட்ட விரோதமாக தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது
செய்தியாளர்: சரவணகுமார்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அதிக அளவில் வங்கதேசத்தினர் போலி ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டிகேடி மில் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி 26 வங்கதேசத்தினர் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி ஆதார் அட்டைகளை வழங்கும் ஏஜென்ட்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.