தூத்துக்குடி | தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவனை சரமாறியாக வெட்டியதாக 3 சிறார்கள் கைது
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (17), திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று பள்ளிக்குச் செல்ல அரியநாயகிபுரத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பேருந்து கெட்டியம்மாள்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து ஏறி உள்ளது. இதையடுத்து அந்த கும்பல் பேருந்தில் இருந்த தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து பேருந்தில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை ஆகியோர் தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் காரணமாக அரியநாயகிபுரம், கெட்டியம்மாள்புரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மூன்று இளம் சிறார்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த இளம் சிறார்களின் ஒருவரது தங்கையிடம் தேவேந்திரன் காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் தனது வீட்டில் உள்ள நபர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அண்ணணுக்கு தெரியவரவே தனது உறவினர்களான இரண்டு சிறார்களை அழைத்துக் கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் தேவேந்திரன் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பைக்களில் வந்த இளம் சிறார் ஒருவர் தேவேந்திரன் பேருந்து ஏறுவதை அடுத்த நிறுத்தமான கெட்டியம்மாள்புரம் பேருந்து நிலையத்தில் நின்ற சக நண்பரிடம் கூறியுள்ளார். பட்டப்பகலில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவனை சராமரியாக வெட்டிய சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.