தமிழக ரேசன் கடைகளில் குறைக்கப்பட்டதா கோதுமையின் அளவு? புதிய குற்றச்சாட்டு..
தமிழ்நாட்டுக்கான கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்த நிலையில் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு சூழல் உருவாகியுள்ளது. வழக்கமான அளவில் கோதுமை விநியோகிக்கப்படாததால் எளிய மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் ஒருவர், குறிப்பிட்ட அளவுக்கு, அரிசி அல்லது கோதுமையைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்துவருகிறது. அதன்படி, அரிசியின் எடைக்கு நிகராக ஒருவர் 5 கிலோ முதல் 10 கிலோ வரை கோதுமையைப் பெற முடியும்.
இந்நிலையில், இந்த மாதத்துக்கான கோதுமை ஒதுக்கீட்டை 8 ஆயிரத்து 576 டன்னாக குறைத்திருக்கிறது மத்திய அரசு. முன்னதாக, இந்த ஒதுக்கீடு 17 ஆயிரத்து 100 டன்னாக இருந்தது. அதாவது, சென்ற மாதம் வரை இருந்த கோதுமை ஒதுக்கீட்டு அளவு கிட்டத்தட்ட சரிபாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இருப்புக்கு ஏற்றபடி கோதுமை வழங்க வேண்டும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் காரணமாக ஐந்து கிலோவுக்கு பதிலாக இரண்டு கிலோ மட்டுமே கோதுமை வழங்கப்படுவதாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கெனவே வழங்கியதுபோல், கூடுதல் கோதுமை ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய உணவுத் துறையிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.