தேனி | அடகு கடை நடத்திய பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 24 லட்சம் மாயம் - விசாரணையில் திடுக் தகவல்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி மாவட்டம் தேவாரம் ஏ.ஆர்.டி காலனியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் சிவனேசன். இவரது மனைவி அடகு கடை நடத்தி வருகிறார். இருவரும் தேவாரத்தில் உள்ள வங்கியில் தனித்தனியே கணக்கு வைத்துள்ளர். ஸ்மார்ட் போன் வைத்துள்ள இவர்கள் இருவரும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்கள் வங்கியின் செயலிகளை பிறர் உதவியுடன் தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக் கணக்கை சரிபார்த்த போது, 21 நாட்களில் சிறிது சிறிதாக 24 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கியில் சென்று விசாரித்த போது, 5 வங்கிகளின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மளிகைக் கடைக்காரர் சிவநேசன் தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தேனி மாவட்ட எஸ்பி., சிவபிரகாசம் உத்தரவுப்படி, தேனி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவனேசன் தம்பதியினரின் இரண்டு குழந்தைகள், அவரது மனைவியின் ஸ்மார்ட் போனில் "கேம்" விளையாடிய போது, வங்கிக் கணக்கு விபரங்கள் வேறு மொபைலுக்கு கசிந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூருவில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றும் பீகார் மாநிலம் பாட்னா அஹமத்பூரைச் சேர்ந்த அர்ஜூன் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அர்ஜூன் குமார் தனது நண்பர்கள் நீரஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து கணக்கு துவங்கி, இது போன்று பிறரின் வங்கிக் கணக்கு தகவல்களை பெற்று அவர்களின் கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனில்குமார், தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற இதர மோசடிகள் குறித்து அனில் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர். குழந்தைகள் ஸ்மார்ட் போனில் "கேம்" விளையாடிய போது, நடந்த இந்த மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.