தென்காசி | வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது
செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தனிப்படைகள் அமைத்து கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புளியங்குடி அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும்படி நின்ற இளைஞரை பிடித்து சோதனை நடத்தினர். அவர் 5 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர், வாசுதேவநல்லூர் புதுமந்தை தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் இளங்கோவன் (30) என்பதும், அவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான இளங்கோவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.