”அவங்கள உடனே கைது செய்யுங்க; காட்டுமிராண்டித்தனமான செயலை முதல்வர் கண்டிக்காதது ஏன்?”-எவிடென்ஸ் கதிர்

வீட்டு வேலைக்கு சேர்ந்த ரேகாவை கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருக்கின்றனர்.
மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர்
மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர்PT
Published on

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் அவரது மனைவி மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுமி அளித்துள்ள வன்கொடுமை புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி, மேற்படிப்பு படிக்கவைக்க முடியாத நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் மூலம் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்கு சேர்ந்த சிறுமி கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருப்பதாக சிறுமி தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, சிறுமி பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். தனது மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் அழுதபடி சொல்லி இருக்கிறார்.

மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது. சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து, பட்டியலின சிறுமியை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரை அடுத்து சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் மிரட்டல் வரவே, இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை மதுரைக்கு அழைத்து சென்றுள்ளதாக சமூக செயல்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் தெரிவிக்கின்றார்.

ஆண்டோ மதிவாணன் - மார்லினா
ஆண்டோ மதிவாணன் - மார்லினா PT WEP

இந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறும்போது.. 

”இந்த பெண்ணை 15ம் தேதி பொங்கல் அன்று இவரது வீட்டிற்கு அருகில் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவியும் காரில் வந்து விட்டு சென்றனர்.

உடல் முழுவதும் காயம்.. தாயார் அதிர்ச்சி!

பெண்ணின் உடல் முழுவதும் காயத்தை பார்த்த அவரது தாயார் 16ம் தேதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிஷன் செய்தனர். அங்கு வழக்கு பதியப்பட்டு இப்பெண்ணிற்கு என்னென்ன காயங்கள் எதனால் ஏற்பட்டது, யார் அடித்தது? எதனால் அடித்தனர்? என்று கேட்டபொழுது இந்த பெண் விளாவாரியாக விஷயத்தை தெரியப்படுத்தினார். இதன் அடிப்படையில், உடனடியாக திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. முன்னதாக உளுந்தூர்பேட்டை போலிசாரும் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து சென்றார்கள்.

புகார் கொடுத்ததால் வந்த மிரட்டல்!

இந்த விசாரணையானது 17ம் தேதி இரவு ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக போலிசார் ரேகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் நடுவில் அப்பெண்ணிற்கும் குடும்பத்தாரினருக்கும் மிரட்டல் இருந்ததால் இவர்களின் பாதுகாப்பு கருதி மதுரைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த வழக்கில் நான் சொல்வது, உடனடியாக சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வேண்டும். அடுத்ததாக இப்பெண்ணிற்கு நஷ்ட ஈடாக பெரும் தொகை தரவேண்டும். மேலும் இப்பெண்ணை படிக்கவைக்க உதவி செய்யவேண்டும்.

முதல்வர் ஏன் இதனை கண்டிக்கவில்லை!

இத்தகைய நிகழ்வினை கண்டித்து முதலமைச்சர் பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எத்தனையோ விஷயங்களுக்கு குரல் கொடுக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டி தனமான செயலை எதிர்த்து குரல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com