சனிக்கிழமை ஆட்டோவில் நடந்தது என்ன? கண்விழிக்காத அஜித்குமார்.. பதறிய போலீஸ்!
திருப்புவனம் அஜித்குமார் கொலை விவகாரத்தில், அஜித்தை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் பல முக்கிய விடயங்களை கூறியுள்ளார். சம்பவத்தன்று என்ன நடந்தது? காவலர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அனைத்தையும் நீதிபதியிடம் கூறி இருக்கிறார்.
காவலர்களால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், உடற்கூராய்வு அறிக்கை நேற்றைய தினம் வெளியானது. உடல் முழுவதும் 50 காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு, சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை என்று எண்ணற்ற காயங்கள் கண்டறியப்பட்டன. வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாட்சியங்களை அழைத்து நீதிபதி விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், சம்பவத்தன்று அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் அய்யனார், அன்று நடந்தவை குறித்து விரிவாக கூறியுள்ளார். சக்தீஸ்வரன்தான் தன்னை அழைத்ததாகவும், அப்போது மயங்கிய நிலையில் கண்களை மூடிக்கிடந்த அஜித்குமாரை 4 காவலர்கள் சேர்ந்து ஆட்டோவில் தூக்கி வைத்த்தாகவும் தெரிவித்துள்ளார்.
ஆட்டோவில் ரத்தம் ஏதும் ஒழுகவில்லை என்றவர், அஜித்தை காவலர்கள் சேர்ந்து எழுப்ப முற்பட்டதாகவும், காவலர்கள் பதற்றமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரொம்ப சீரியஸாக இருக்கிறார்.. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றே தன்னை அழைத்ததாகவும், மருத்துவமனை சென்று காத்திருந்தபோது அஜித்குமார் இறந்துவிட்டதாக பேசிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று தன்னுடைய பெயர், செல் எண் உள்ளிட்டவை குறித்து கேட்டுகொண்டு கிளம்பச் சொன்னதாகவும், காவலர்களின் பெயர் தெரியவில்லை.. அடையாளம் வேண்டுமானாலும் காட்டுவேன் என்று கூறியுள்ள அய்யனார், இதுதொடர்பாக நீதிபதியிடமும் விளக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த உடற்கூராய்வின் மூலம், சனிக்கிழமையே அஜித் மரணித்தார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டுனரின் இந்த வாக்குமூலம் மிக முக்கிய சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.