பெங்களூர் டூ குருவாயூர் | அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட MDMA போதைப் பொருட்கள் பறிமுதல்
செய்தியாளர்: மகேஷ்வரன்
கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கேரளாவிற்கு MDMA எனப்படும் போதைப் பொருள் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்க, கூடலூர் காவல்துறையினர் அடிக்கடி அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபடும் MDMA போதைப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள்.
அப்படி நேற்று மாலை கூடலூர் வழியாக கேரளாவிற்கு MDMA போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் வனத்துறை சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பேருந்துக்குள் சந்தேகத்திற்கிடமாக இருந்த கேரள மாநில இளைஞரை சோதனை செய்ததில், அவரிடம் 600 கிராம் MDMA போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், அதனை கடத்தி வந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சபீர் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட 600 கிராம் MDMA போதைப்பொருளின் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.