சேலம் | இருசக்கர வாகனத்தில் விவசாயி வைத்திருந்த ரூ.2.5 லட்சம் திருட்டு – ஒருவர் கைது
செய்தியாளர்: ஆர்.ரவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கருப்பன் சோலை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரின் மகன் விவசாயி பாலாஜி (46). கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் உள்ள வங்கியில் தனது வங்கிக் கணக்கில் இருந்த நான்கு லட்சம் ரூபாயை எடுத்து வந்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார் பாலாஜி.
இதையடுத்து அவர், பூச்சிக்கொல்லி மருந்து வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலாஜி வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாலாஜி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பிள்ளை என்பவர் மகன் துரை (31) மற்றும் அவரது நண்பர் அன்பு ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து துரை என்பவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 2.50 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றி அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அன்பு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.