சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு... மாநகராட்சி நிர்வாகம் சொல்வது என்ன..?
சென்னையில் டெங்கு மற்றும் ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டி' வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன.
தமிழ்நாட்டில் தினசரி டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10-ஆக இருந்த நிலையில், தற்போது, இந்த எண்ணிக்கை 60-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில், டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சென்னையில், அம்பத்துார், அண்ணாநகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, ராயபுரம் மண்டலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டெங்கு அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, டெங்கு பாதிப்புகளைத் தடுக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. மக்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியிலும் வீட்டின் அருகிலும் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றவேண்டும், மழைநீர் தேங்கும்வகையிலான பொருட்களையும் அகற்றவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியை தடுப்பது மக்களின் பொறுப்பு என்று சென்னைமாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

