ஒடிசாவின் பாலசோர் பகுதியில், தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
லோக்நாத் தலே ஒடியா நாளிதழான சம்பத் மற்றும் தொலைக்காட்சி சேனலான கனக் நியூஸின் நிருபராக உள்ளார். பிரவுன் சுகர் கடத்தலைத் தடுப்பதில் தோல்வியடைந்தது தொடர்பான செய்தியை வெளியிட்டதால் உள்ளூர் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாக பத்திரிகையாளர் லோக்நாத் தலே குற்றம் சாட்டினார். இதனால் சில நாட்களுக்கு முன்பு ஊர்க்காவல்படை வீரர் இரு சக்கரவாகனத்தால் தன் மீது மோதியதாகவும், அதற்காக அவரிடம் அவரிடம் நஷ்ட ஈடு கேட்டதால் வழக்கு பதியப்பட்டதாகவும், போலீசார் தனது செல்போனை பறித்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய தலே, “ கைது செய்யப்பட்டவுடன் சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். இன்று காலை, மருத்துவமனை படுக்கையில் இடது காலில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் என்னைக் கண்டேன். கடும் ஆட்சேபனைக்கு பின்னர் காலை 11.30 மணியளவில் சங்கிலி அகற்றப்பட்டது. இதுபற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்" எனக் கூறினார்.
இந்த சம்பவம் பற்றிய விசாரணைக்கு பாலசோர் போலீஸ் சூப்பிரண்டு சுதன்சு சேகர் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய பாலசோர் சட்டமன்ற உறுப்பினர் சுகந்த நாயக், “அந்த இன்ஸ்பெக்டரின் ஆணவ செயல் பற்றி நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன், அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். பத்திரிக்கையாளர் மீதான தாக்குதலை கண்டித்த ஒடிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்கு கடும் நடவடிக்கை தேவை எனக் கூறினார்.