மதுரை: வீடு புகுந்து தொடர் கொள்ளை - இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது
மதுரையில் வீடுபுகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை கைது செய்த போலீசார், 5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சமீப நாட்களில் மதுரையில் உள்ள ஆண்டாள்புரம், வசந்த நகர் பகுதியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து அதிக அளவிலான வழக்குகள் பதியப்பட்டதை தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மதுரை சுப்ரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர் மணிக்குமார் தலைமையிலான குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டதோடு, அந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆண்டாள் புரத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் 16 வயது சிறுவன் (ஸ்ரீகாந்த்) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கொள்ளை சம்பவங்களின்போது அவர்களுக்கு உடந்தையாக இருந்தது கரிமேடு பகுதியைச் சேர்ந்த மீனா மற்றும் அனுசியா என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் நால்வரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.