உணவுப் பாதுகாப்புத்துறை ரெய்டில் கிலோ கணக்கில் சிக்கிய கெட்டுப்போன, நிறமி சேர்க்கப்பட்ட இறைச்சிகள்!

இந்திய மக்களைப் பொறுத்தவரை உணவு என்பது பண்பாடு, கலாச்சாரம். அப்படிப்பட்ட ஊரில் உணவால் மக்கள் இறக்கும் நிகழ்வு தற்போது அடிக்கடி நடந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது.
உணவுப் பாதுகாப்புத்துறை ரெய்டு
உணவுப் பாதுகாப்புத்துறை ரெய்டுபுதிய தலைமுறை

பொதுவாக சாப்பாட்டை கொண்டாடும் மக்கள் தமிழ்மக்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல்... இந்திய மக்களைப் பொறுத்தவரை உணவு என்பது பண்பாடு, கலாசாரம். அப்படிப்பட்ட ஊரில் உணவால் மக்கள் இறக்கும் நிகழ்வுகள், தற்போது அடிக்கடி நடந்து வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா வாங்கி உண்ட கலையரசி என்ற மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்புத்துறை ரெய்டு
சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு.. நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் விற்க தற்காலிக தடை

இதுமட்டுமன்றி இப்போதெல்லாம் உணவகங்களில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுகின்றன என்றும் கவனக்குறைவால் சமைக்கப்படும் உணவுகளில் இறந்த உயிரினங்கள் இருப்பதும் அடிக்கடி செய்தியாகின்றன. அச்சமயங்களில் எல்லாம் அந்த குறிப்பிட்ட உணவகத்திலும், அதனையொட்டியுள்ள பிற உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்து அதிலும் சில உணவகங்களுக்கு சீல் வைப்பார்கள். இப்படி இம்முறையும் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

உணவுப் பாதுகாப்புத்துறை ரெய்டு
தமிழ்நாடு முழுவதும் தொடரும் சோதனை... நூறு கிலோவுக்கும் மேல் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!

அதில் சிலவற்றையும், கைப்பற்றப்பட்ட இறைச்சிகளின் விவரம் பற்றியும், இங்கே பார்ப்போம்.

ராமநாதபுரம்

Summary

ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி லிங்கவேல், விஜயராஜ் ஆகியோர் நகரில் உள்ள பல்வேறு ஷவர்மா விற்பனை கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். ராமநாதபுரம் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் அதிக நிறமிகளை பயன்படுத்தியதாகவும், சுகாதாரமுன்றி வைத்திருந்ததாகவும், முறையாக உணவு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததாகவும் 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு சில கடைகளில் இருந்த கெட்டுப்போன 6 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

தேனி நகர் பகுதிகளில் இயங்கும் ஷவர்மா இறைச்சி விற்பனை கடைகளில் தேனி - அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகளை அழித்ததோடு அபராதமும் விதித்தனர். தேனி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஃபாரஸ்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஷவர்மா இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களில் தேனி -அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஃபாரஸ்ட் ரோடு பகுதியில் இயங்கும் கடை ஒன்றில் கெட்டுப்போன இறைச்சிகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் நாள்பட்ட புரோட்டா வைத்திருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. அவற்றையும் கைப்பற்றிய சுகாதாரத் துறையினர் அவற்றை நகராட்சியின் குப்பையில் கொட்டி அழித்தனர்.

நெல்லை

நெல்லையில் மாநகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தந்தூரி சிக்கன் மற்றும் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் உள்ள சிக்கன் பயன்படுத்திய ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்தில் 26 கிலோ பொறித்த சிக்கன் குளிர் சாதன பெட்டியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலாவதி தேதி இல்லாத 50 குபுஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கெட்டு போன இறைச்சி உணவுகள் பினாயில் தெளித்து உடனடியாக அழிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு சாலையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வம் தலைமையில் 5பேர் கொண்ட அலுவலர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கடையில் வைக்கப்பட்டுள்ள ஷவர்மா, ஃப்ரீசரில் வைக்கப்பட்டுள்ள சிக்கன் மற்றும் குடோனில் வைக்கப்பட்டுள்ள மசாலா வகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களிடம் நாள்பட்ட சிக்கன், கறி விற்பனை செய்யக்கூடாது என்றும் தரமான மசாலா பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் ஷவர்மா, ப்ஃரைட் ரைஸ் , சிக்கன் உள்ளிட்டவை குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர். மதுரை மாநகரின் பைபாஸ் சாலை, டவுண்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்கள் மசாலாக்களை சேர்த்த இறைச்சிகள் 70 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டன.

வண்ணங்கள் சேர்த்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றனர். இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர், “மதுரையில் ஆய்வின்போது உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கான சாக்லெட், மிட்டாய் குறித்து சோதனை நடந்திவருகிறோம், தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும்” என்றார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி பகுதியான கூறைநாடு, பூக்கடை தெரு, அரசு மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கடைகளில் செய்யப்படும் உணவுகளின் தரம், உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது பல்வேறு உணவகங்களில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நான்கு கடைகளுக்கு ரூ. 27 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று தரமற்ற இறைச்சி உணவுகளை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் ஷவர்மா விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுலா தளங்களான நாகூர், வேளாங்கண்ணி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கெட்டுப்போன 5 கிலோ கோழி இறைச்சிகளையும், தயாரிப்பு தேதி இல்லாத ஷவர்மா மாவுகளையும் கைப்பற்றி அழித்த உணவு பாதுகாப்புத் துறையினர் மூன்று உணவகங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

கோவை

கோவையிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம், கோட்டைமேடு, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 40 கடைகளுக்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கடையில் பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி, ஷவர்மா சிக்கன் மற்றும் மட்டன் தொடர்பான பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பயன்படுத்த தகுதி இல்லாத 5.25 கிலோ ஷவர்மா சிக்கன் உட்பட மொத்தம் 35 கிலோவிற்கும் அதிகமான இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட இருப்பதாக தெரிவித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆய்வுக்குப் பின்னர் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com