கேரளா: மனைவியை காருக்குள் வைத்து உயிரோடு எரித்த கணவர்
செய்தியாளர்: சுமன்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். பேக்கரி கடை நடத்தி வரும் இவருக்கு இவர் அனிலா என்ற மனைவி உள்ளார். இந்த பேக்கரியை, பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அனிலா நடத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கு கணவர் பத்மராஜன், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு (செவ்வாய்கிழமை) அனிலா பேக்கரியை அடைத்து விட்டு தனது காரில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த பத்மராஜன், அனிலாவின் காரை வழிமறித்து காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்த அனிலா உடல் கருகி காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், காரில் அனிலாவுடன் பயணம் செய்த பெண் பணியாளர் தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்த தீயை அணைத்து அனிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தீக்காயங்களுடன் நின்றிருந்த பணிப்பெண் சோனி என்பவரை மீட்டு சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பத்மராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.