கரூர் | காரில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - வடமாநில நபர் கைது
செய்தியாளர்: வி.பி. கண்ணன்
ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர், காரில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்திச் சென்றார். அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் கார் டயர் பஞ்சரானது. இதையடுத்து பஞ்சரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது பஞ்சரை சரி செய்ய வந்த மெக்கானிக்குக்கு வீரேந்திர சிங்கின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடனடியாக மெக்கானிக், அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசருக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று வீரேந்திர சிங்கின் காரில் சோதனையிட்டபோது, அதில் 25 மூட்டைகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், இரண்டு மூட்டைகள் கூலிப் பொருட்களும் இருந்தது தெரியவந்தது இவற்றின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து வீரேந்திரசிங்கை கைது செய்த அரவக்குறிச்சி போலீசார், அவரிடமிருந்து 25 மூட்டை குட்கா மற்றும் கூலிப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். குட்கா பொருள்கள் ராஜஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.