கள்ளக்குறிச்சி | சட்டவிரோத கருக்கலைப்பு - மருந்தக உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவர், டி-ஃபார்ம் படித்துவிட்டு மூன்று வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, ஆண்மை சக்தி பெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் நாட்டு மருந்து கிடைக்கும் என ஆரம்பித்த இந்த தனியார் மருந்தகத்தில் தற்போது சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் சங்கராபுரம் தனிப்பிரிவு காவலர் இளந்திரையன் ஆகியோர் நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது கருக்கலைப்பு செய்வதற்கான உபகரணங்கள் இருந்தது தெரியவந்த நிலையில், மேலும் மருந்தகத்திற்கு வந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் கருக்கலைப்புக்கு வந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனை அடுத்து மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவருக்கு உதவியாக இருந்த மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற கருக்கலைப்புச் சம்பவம் நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
போலீசார் மருந்தக உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என தெரிந்து கொள்ள 15000 வசூல் செய்வதாகவும், பெண் குழந்தை உள்ளது என தெரிய வந்தால் கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது