செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பெரிய கருப்பசாமி, துரைபாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று, காவலர் நிற்பதைப் பார்த்ததும் திரும்பிச் செல்ல முற்பட்டது. இதனை கண்ட தலைமை காவலர் வாகனத்தின் அருகில் சென்று உள்ளே இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உடைமைகளை சோதனை செய்துள்ளார்.
அப்போது 6 கிலோ எடை கொண்ட 1.5 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா அவரிடம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்பதும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர் பெங்களூருவில் இருந்த கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கஞ்சாவை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து தனக்குத் தெரியாது எனவும், வாட்ஸ்-அப் கால் மூலமாக மட்டுமே தொடர்பில் இருப்பதாகவும் கஞ்சாவை மாற்றிவிட்டு பணம் பெறுவது மட்டும்தான் தன்னுடைய வேலை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராகுல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.