கன்னியாகுமரி: மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவர்.. கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
செய்தியாளர்: NOWFAL
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், பால்குளம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில், மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அமைந்துள்ள பால்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு மாரிமுத்து (35) என்பவர் அவரது மனைவி சந்தியா (30) உடன் வசித்து வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சந்தியா அவ்வப்போது கணவனை வந்து பார்த்து செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சந்தியா மற்றும் முத்துமாரி இருவரும் வெகு நேரமாக சண்டை போட்டுள்ளனர். பின்னர் இரண்டு பைகளில் மாரிமுத்து எதையோ எடுத்துச் செல்வதை கண்ட அங்கிருந்த சில நாய்கள் மாரிமுத்துவை பார்த்து குலைத்துக் கொண்டே இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) பன்றி இறைச்சி வெட்டும் தொழில் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மனைவி சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை வெட்டி கொலை செய்த மாரிமுத்து, உடலை பன்றி கறி வெட்டுவது போன்று துண்டுதுண்டாக வெட்டி தண்ணீரில் கழுவி, பையில் அடைத்து அப்புறப்படுத்த முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.