‘நல்ல காலம் பிறந்திருக்கு’ எனக்கூறி பிசினஸ் ஐடியா கொடுத்த ஜோதிடர்.. ரூ 50 லட்சத்தை இழந்த தம்பதி!
செய்தியாளர் : சாந்த குமார்
சென்னை வேளச்சேரி, பவானி தெருவில் உள்ள கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரும் இவரது கணவர் மணிகண்டன் என்பவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியில் உள்ள ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர், “உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்” என ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
இதில் இருவரும் மகிழ்ச்சியடையவே அதைப் பயன்படுத்திக்கொண்ட ஜோதிடர் அவர்களிடம் “எனது நண்பர் ஒருவருக்கு 2020ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்தேன். உங்களிடம் காலி இடம் உள்ளதா?” என கேட்டுள்ளார்.
அவர்களும் தங்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் காலி இடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். உடனே ஜோதிடர் “அங்கே நீங்கள் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம்” என கூறி அவர்களைப் பேசியே சம்மதிக்க வைத்துள்ளார்.
பின்னர் இருவரையும் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய்பாஸ்கர் என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் அந்த ஜோதிடர். மேலும் விஜயபாஷ்கரின் தந்தை டெல்லியில் RAW பிரிவில் பணிபுரிவதாகவும், அவர் பெரிய அரசியல்வாதி என்றும், அதிகாரிகள் எல்லாம் அவருக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். 85 லட்சம் கொடுத்தால் உடனடியாக பெட்ரோல் பங்க் வைக்க லைசென்ஸ் வாங்கி தருவார் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பி இருவரும் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் வங்கியில் தனி நபர் கடன் பெற்றும் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நான்கு தவணையில் 50 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளனர்.
ஆனால் பணம் கொடுத்து வருடக்கணக்கில் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுப் தராமல் இருக்கவே சந்தேகமடைந்த மனிகண்டன் கவிதா தம்பதியினர் அவரைத் தொடர்ந்து செல்போனில் தொடர்புகொண்டு கேட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் முறையான பதில் எதுவும் கூறாமல் இவர்களைத் தவிர்த்து வந்துள்ளனர்.
நேரில் சென்று கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த தம்பதியினர் ஜோதிடர் வெங்கடசுரேஷ் மற்றும் விஜய்பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்த நிலையில் 11 மாதம் கழித்து ஜோதிடர் வெங்கட சுரஷை தற்போது கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய்பாஸ்கரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.