அடுத்தடுத்து 'அசால்ட்' சம்பவங்கள்: துப்பாக்கி உரிமம் பெறுவது எளிய நடைமுறையா?

அடுத்தடுத்து 'அசால்ட்' சம்பவங்கள்: துப்பாக்கி உரிமம் பெறுவது எளிய நடைமுறையா?
அடுத்தடுத்து 'அசால்ட்' சம்பவங்கள்: துப்பாக்கி உரிமம் பெறுவது எளிய நடைமுறையா?

அடுத்தவரால் தன் உயிருக்கு ஆபத்து உண்டு என்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதே துப்பாக்கியைப் பயன்படுத்தி, தன்னுடைய பகைவரின் உயிரைப் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதுகுறித்தும், துப்பாக்கி உரிமம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.


கடந்த ஜூலை மாதம் நிலத் தகராறு தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை துப்பாக்கியால் சுட்டதில், அந்த வழியாகச் சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த மோதல் தொடர்பாக திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்த போலீசார், அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதேபோல சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்த தலித்சந்த், இவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகிய மூவரும் சுட்டுக் கொல்லபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர் கைலாஷ் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து சினிமா படத்தை மிஞ்சும் வகையில், பழனியில் சர்வ சாதரணமாக நடராஜன் என்ற தொழிலதிபர் தனது கைத்துப்பாக்கியால் இருவரைச் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனiயில் சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணி என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நடராஜன் மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று தமிழகத்தில் நடந்துள்ள சில துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், 'ஒருவர் துப்பாக்கி உரிமம் பெறுவது அவ்வளவு எளிமையான நடைமுறையா?' என்ற முணுமுணுப்பையும் கேட்க முடிகிறது.

துப்பாக்கி உரிமம்... சில அடிப்படைத் தகவல்கள்:

துப்பாக்கி உரிமம் வழங்குவது யார்? யார் யாருக்கெல்லாம் துப்பாக்கி உரிமம் வழங்கப்படுகிறது? என்ற கேள்வி இப்போது பொதுமக்களிடம் எழுகிறது. இது குறித்து காவல் துறை தரப்பில் கேட்டறிந்த தகவல்:

ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் அளிப்பதற்கு தலைநகர் சென்னை எனில் காவல் ஆணையருக்கும், பிற மாவட்டங்கள் எனில் அந்ததந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அதிகாரம் உள்ளது. தனிப்பட்ட நபர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு முதலில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதில், விண்ணப்பவரின் அடையாளச் சான்று, வருமானவரிச் சான்று, இருப்பிடச் சான்று, வங்கி பரிவர்த்தனை விபரங்கள், தொழில் மற்றும் வருமானவரி தொடர்பான ஆவணங்கள், சொத்து விபரங்கள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். அதில் குறிப்பாக விண்ணப்பதாரரின் மனநலம் குறித்த சான்றும் அவருக்கு எதிரிகளிடமிருந்து கொலை மிரட்டல் இருந்தால், அதுகுறித்த முதல் தகவல் அறிக்கையின் நகலும் இணைக்க வேண்டியது கட்டாயம்.


சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு மாவட்ட நிர்வாக அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ விசாரணை நடத்துவார்கள். அதில் துப்பாக்கிக் கேட்டு விண்ணப்பித்தவருக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தகவல்கள் சேகரிக்கப்படும். இதில், முக்கியத் தகவல் என்னவென்றால், துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர் மீது குற்ற வழக்குகளோ சிவில் புகார்களோ இருந்தால், அவர்களுடைய மனு உடனடியாக நிராகரிக்கப்படும். அதுதவிர விண்ணப்பதாரர் மீது சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் துப்பாக்கி உரிமம் கொடுப்பதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும். மேலும் அவர் ஆறு முதல் பத்து தோட்டாக்கள் வரை வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. வாங்கிய ஒவ்வொரு தோட்டாவுக்கும் துப்பாக்கி வைத்திருப்பவரே முழு பொறுப்புடையவர் ஆவார். துப்பாக்கி கேட்டு விண்ணப்பிக்கும் முறையை பொறுத்து, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் செல்லுபடியாகும்.


துப்பாக்கி உரிமம் பெற்றவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கி உரிமத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதேபோல துப்பாக்கி வைத்திருப்பவர் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது காவல் துறையின் அனுமதியைப் பெறவேண்டும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால், துப்பாக்கியை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

ஒருவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை நிரந்தரமாக ஒப்படைக்க விரும்பினால், அரசின் அனுமதியுடன் செயல்படும் ஆம்ஸ் டெபாசிட் சென்டர் என்ற துப்பாக்கி விற்பனை மையத்தில் ஒப்படைக்கலாம். துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும்போது தவறான ஆவணங்களை சமர்ப்பித்தாலோ அல்லது துப்பாக்கியை வைத்து வன விலங்குகளை வேட்டையாடினாலோ அல்லது வனப்பகுதிகளில் மரங்களை சேதப்படுத்தினாலே கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறது காவல்துறை.

இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இருந்தும், உரிமம் பெற்ற துப்பாக்கியை அசால்டாக பயன்படுத்தி அடுத்தவரின் உயிரைப் பறிப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com