’கிப்லி’ பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்!
`கிப்லி' பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், கவனத்துடன் இருக்குமாறு சைபர் க்ரைம் காவல் துறை எச்சரித்துள்ளது.
`கிப்லி' செயற்கை நுண்ணறிவுக் கலைக்காக சமர்ப்பிக்கப்பட்ட தரவை பயனர்கள் எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய முக்கியமான விஷயம் என, செய்திக்குறிப்பு ஒன்றில் சைபர் க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
’கிப்லி'க்காக புகைப்படம் பதிவேற்றப்பட்டால், அதை நீக்க எந்த உத்தரவாதமான வழியும் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளது. அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக் கூடிய சேனல்கள் மூலம் புகைப்படங்கள் பெறப்படும்போது, தனிநபர்களும் வணிகர்களும் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. `கிப்லி'க்கான இலவச பதிவிறக்கங்களை வழங்கும் பல வலைத்தளங்கள், பெரும்பாலும் தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளாக உள்ளதாகவும், இந்த நிலை, தரவு இழப்பு மற்றும் அடையாள திருட்டுக்கு வழிவகுப்பதாகவும் சைபர்க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
மோசடி செய்பவர்கள் `கிப்லி' கதாபாத்திரங்களையும் கலையையும் ஃபிஷிங் மோசடிகளில் தூண்டுதலாகப் பயன்படுத்தலாம் என்றும், இணைப்புகளை க்ளிக் செய்வதால் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ சந்தேகம் இருந்தாலோ, 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையத்தளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்துள்ளது