ஈரோடு | வழக்கறிஞர் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் - கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு அருகே எல்லபாளையம் கிருஷ்ணாநகர் பகுதியில் வழக்கறிஞர் ராஜமாணிக்கம் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகே வசிக்கும் இளநீர் வியாபாரி அருணகிரிக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி அருணகிரி அரிவாளுடன் ராஜமாணிக்கம் வீட்டின் முன்புற கேட்டை தாண்டிக் குதித்து ராஜமாணிக்கத்தை தாக்க தேடியுள்ளார்.
அப்போது வீட்டில் ராஜமாணிக்கம் இல்லாததால் வீட்டின் முன்பு நீண்ட நேரம் அருணகிரி காத்திருந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அருணகிரியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் உரிய சிசிடிவி ஆதாரத்துடன் 29ம் தேதி ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் அருணகிரி மற்றும் அவர் மனைவி உட்பட சிலர் மீது புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார், அருணகிரி, அவரது மனைவி வேலுமணி மற்றும் அருணகிரியின் சகோதரர் வாசு ஆகிய மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.