தருமபுரி | குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய தலைமை காவலர்
செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மதனேரிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார் (36). இவர் மீது, பாலக்கோடு காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாசமாக பேசி பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்படாமல் இருந்துள்ளார். இந்த நிலையில வழக்கில் ஜாமீனில் அனுப்ப, கணினி பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் சுரேஷ் (46), சக்திகுமாரிடம் ரூ.10,000 பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திகுமார் இது குறித்து தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10,000 மதிப்புள்ள நோட்டுக்களை சக்திகுமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதை பெற்றுக் கொண்ட சக்திகுமார், தலைமை காவலர் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரசாயனம் தடவிய நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.