பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்தின் தூக்கு தண்டனை ரத்து., குழந்தைகள் நல செயல்பாட்டாளர் வேதனை...
ஷ்அந்த 6 வயது சிறுமிக்கு விளையாடுவது பிடிக்கும்.. பிங்க் கலர் பிடிக்கும்.. அம்மா, அப்பாவை மிகவும் பிடிக்கும்.. படிப்பதில் சுட்டி.. ஆறு வயது வரை வீட்டுக்குள் தேவதையாக வலம் வந்து மகிழ்ச்சியை வாரி இறைத்தவள்.. 2017 பிப்ரவரி 5 ஆம் தேதி வீட்டு வளாகத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு ஹோம் ஓர்க் செய்யவேண்டிய ஞாபகம் வந்துவிட்டது. பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் ஹோம் ஓர்க் செய்ய வீட்டுக்கு திரும்பிய ஹாசினிக்கு அதுதான் கடைசி தருணங்கள்..
சிறுமியை காணவில்லை என்று முதலில் நமக்கும் செய்தி வந்தது. அந்த சிறுமியை அந்த பகுதி மக்களே திரண்டு தேடிக் கொண்டிருந்தனர். இந்த காட்சிகளைக் கண்டபோது பெற்றோராக இருக்கும் யாருக்கும் பதறும். அந்த குழந்தையை அங்கிருந்த அத்தனை பேரும் பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் தானும் தேடிக்கொண்டிருந்தான் அந்த குற்றவாளி. அப்பார்ட்மென்ட்டின் சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது அங்கு நமது செய்தியாளரும் இருந்தார். அந்த சிசிடிவியை பரிசோதித்தபோதும் அந்த குற்றவாளியும் அந்த கும்பலில் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. எல்லோருக்கும் குழந்தையை காணவில்லை. அதுவும் பெண் குழந்தை. வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள் யாரும் அதன் பிறகு அந்த சிறுமியை பார்க்கவில்லை.
சிறுமியைத் தேடுவது போல நடித்து வந்த தஷ்வந்த், சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் பையுடன் வெளியே சென்றது தெரியவந்து விசாரிக்கப்பட்டபோதுதான் பிடிபட்டான். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, உயிரோடு இருந்தால் காட்டிக்கொடுத்து விடுவாள் என்று அஞ்சி அந்த குழந்தையை நெடுஞ்சாலையோரம் எரித்துக்கொல்லப்பட்ட இடத்தை காட்டியது இதே தஷ்வந்த் தான். சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவாள் என்று கண்ணீருடன் காத்திருந்த குடும்பத்துக்கு கருகிய உடல்தான் கிடைத்தது. இதைவிட ஒரு பெற்றோருக்கு வேதனையான நிகழ்வு நடக்க முடியுமா என்ன? மகளை இழந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் அந்த குடும்பம் மீண்டும் ஆந்திராவுக்கே திரும்பி விட்டது.
தஷ்வந்தை கைது செய்த காவல்துறை, பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. விசாரணைக்காக மதனந்தபுரம் வீட்டிற்கு தஸ்வந்தை அழைத்துச்சென்றபோது, அங்கே குழுமியிருந்த உறவினர்கள் மற்றும் பொது மக்கள் தஷ்வந்தை அடித்து உதைத்தனர். அவரை காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து மீட்டு அழைத்துச்சென்றனர்.
தஷ்வந்த் தான் இந்த கொடூர கொலையை செய்தார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனால், ஜாமீனில் வெளிவர முடியாமல் கடந்த 6 மாதங்களாக அவர் சிறையிலிருந்தார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த போதிலும் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காரணத்தினால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தஷ்வந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தஷ்வந்த்தை மகளிர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. தங்கள் ஆசை மகளை கொடூரமாக கொன்ற தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோருக்கு நீதிமன்றத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜாமினில் வெளிவந்தவுடன் தஷ்வந்த் செய்ததோ இன்னொரு கொடூரம். வீட்டில் தஷ்வந்த் அவரது தாயார் சரளாவை அடித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து மும்பைக்கு தப்பி சென்றார். தமிழக காவல்துறையினர் மும்பை சென்று கைது செய்ய போதும் அவர்களிடம் இருந்தும் தஷ்வந்த் தப்பினார். பின்னர் மும்பை காவல்துறை உதவியுடன் தமிழகம் அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமி தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், 2018 பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்குத் தண்டனையும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேவேளையில், தஷ்வந்த் அவரது தாயாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு, செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், தஷ்வந்தின் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதையடுத்து, போதிய ஆதரமில்லை என தஸ்வந்த் விடுவிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.
கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தண்டனையை குறைக்க வேண்டும் என தஷ்வந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம், ஆயுள் தண்டனையாக இருந்தால் விசாரணையே செய்யாமல் மனுவைத் தள்ளுபடி செய்திருப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணை முடியும் வரை தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த்க்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.அதில் தஷ்வந்த் தொடர்பான வழக்கில் முறையாக ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை.அதேபோன்று சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் தஸ்வந்த் தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், டிஎன்ஏ (DNA) ஆய்வும் சரியானதாக ஒத்துப் போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து மரண தண்டனையை வழங்கிய கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம் என தீர்ப்பளித்ததோடு தஷ்வந்த்தை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து வேதனை தெரிவித்துள்ள குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன், மிகக்கொடூர குற்றம் செய்த தஷ்வந்த்தை தொடர்ந்து திட்டமிட்டு காப்பாற்றும் போக்கு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். குழந்தைகளுக்கு நடக்கும் கொடூரங்களில் மிக மோசமான பாலியல் வன்முறை என்றும், ஆனால் போக்சோ சட்டத்தின் கீழான நடவடிக்கை கடுமையாவதற்கு பதில், இதுபோன்று வந்துள்ள தீர்ப்பு பல படிப்பினைகளை தருவதாக தேவநேயன் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, விசாரணை சரியில்லை என்றால், வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறியுள்ள தேவநேயன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்என்று வலியுறுத்தியுள்ளார். குற்றம் செய்த நபர் வெளியே வந்தால் அது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்றும் தேவநேயன் வலியுறுத்தியுள்ளார்.