கடலூர்: பாட்டியை திட்டியதால் ஆத்திரம் - கூலித் தொழிலாளியை குத்திக் கொலை செய்த பேரன் கைது
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகன் சிவா (29) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமான நிலையில், இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருவதாகவும், இவர் மட்டும் தனியாக வீரா ரெட்டிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி செல்லம்மாள் (60) என்ற மூதாட்டியை சிவா, மதுபோதையில் அசிங்கமாக திட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த செல்லம்மாளின் பேரன் அபிமன்யு (19), சிவாவை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், அபிமன்யு, சிவாவை கத்தியால் சரமாறியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சிவா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஆலடி போலீசார், சிவா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அபிமன்யுவை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.