கோவை | விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்த நாய் - பெண் கைது... பின்னணி என்ன?
செய்தியாளர்: பிரவீண்
கோவை அம்மன்குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்படி அங்குள்ள எல் பிளாக்கில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருடைய 5 வயது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சௌமியா தனது வீட்டில் 4 நாய்களை வளர்த்து வரும் நிலையில், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொன்வேலின் மகள்மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதில், சிறுமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பொன்வேல், கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சௌமியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை நாய் கடித்தது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த நாயை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.