மதுரை | விஜயைப் பார்க்க வந்த தவெக தொண்டர்.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல்!
செய்தியாளர்: செ.சுபாஷ்
கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படத்தின் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் சென்றார். அப்போது மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
“என் வேலைக்காக செல்வதால், என்னை யாரும் பின்தொடர வேண்டாம்” என சென்னை விமான நிலையத்தில் விஜய் கூறியும், மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயின் வாகனங்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் சென்று மலர் தூவி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் 3 நாள் கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானத்தில் மீண்டும் சென்னை வருவதற்காக இன்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றார் விஜய்.
அப்போது அங்கு வந்த தொண்டர்கள், ரசிகர்கள் விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவலர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு தவெக தலைவர் விஜய் வரும்போது, திடீரென வந்த தொண்டர் ஒருவர் பாதுகாவலர்களை மீது முன்னே சென்றார். இதையடுத்து பாதுகாவலர் ஒருவர் திடீரென துப்பாக்கி எடுத்து நீட்டினார். வந்தது தவெக தொண்டர் என தெரிய வந்தவுடன் அவரை உடன் இருந்த பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார்.
இதுபற்றி அந்த தொண்டர் நம்மிடையே கூறுகையில், “நான் விஜயின் ரசிகரும்கூட. முதன்முதலில் மதுரையில் விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்தது நான்தான். விஜயை பார்க்கவே அங்கு சென்றேன். தலையில் துப்பாக்கி வைத்தது எனக்கு தெரியாது” என்றார்.