கோவை: போதையில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த இளைஞர் ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். முயற்சி பலனளிக்காத நிலையில் அப்படியே விட்டுவிட்டு தப்பினார்.
இந்த கொள்ளை முயற்சி தகவல் ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு கிடைத்த நிலையில், வங்கி அதிகாரிகள் உடனடியாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செல்வபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த நபர், ஏடிஎம் மையத்தின் அருகில் வசிக்கும் அருணகிரி என்பது தெரியவந்தது.
விழுப்புரத்தைச் சேர்ந்த அருணகிரி கோவையில் குடியேறி கூலி வேலை செய்து வருவதும், ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த அருணகிரியை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கையில் பணம் இல்லாத விரக்தியில், குடிபோதையில் இருந்ததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஊரடங்கு காரணமாக கையில் பணம் இல்லாத விரக்தி காரணமாகவே பணத்தை திருட முயன்றதும், முயற்சி பலனளிக்காத நிலையில் வீட்டிற்கு சென்று தூங்கி விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- ஐஸ்வர்யா