சென்னை | ’இது எச்சரிக்கை..!’ ஓய்வு பெற்ற IFS அதிகாரியிடம் ரூ.6.30 கோடி ஆன்லைன் மோசடி - மூவர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயலிகளில் சேருமாறு வந்த வாட்ஸ்ஆப் செய்தியை பார்த்து இரண்டு வாட்ஸ்ஆப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து ஆன்லைன் மோசடி செய்பவர்கள் அனுப்பிய இணைப்பு மூலம் ஆன்லைனில் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ததுள்ளார். இதைத் தொடர்ந்து ஆனலைன் மோசடிக்காரர்கள் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியை, செயலி மூலம் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய சொல்லியுள்ளனர். இதனையடுத்து அவர், பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.6,58 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
சுமார் ரூ.6.50 கோடி பணத்தை அனுப்பிய பின் தான் ஆன்லைன் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரிடம் ஐஎப்எஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் பணப்பரிவர்த்தனைகளை வைத்து கேரளாவைச் சேர்ந்த மோசடி கும்பல், இந்த ஆன்லைன் மோசடியை அரங்கேற்றியதை கண்டறிந்தனர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித் நாயர் (47), அப்துல் சாலு (47), முகமது பர்விஸ் (44) ஆகியோரை கைது செய்தனர் மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மூன்று செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் மோசடி செய்வதற்காக மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி மோசடி அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார், தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.