மதுரை மாநகராட்சியில் முறைகேடு.. திமுகவினரை காப்பாற்ற முதல்வர் முயற்சி? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல கோடி சொத்துவரி முறைகேடு தொடர்பாக முன்னாள் உதவி ஆணையர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் அதிரடி உத்தரவின் பேரில், திமுக மண்டலத் தலைவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பாக திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சியில் நல்லாட்சி என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்டவை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேட்டில் தொடர்புடைய மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் திமுக அரசால் பாதுகாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி மன்றங்கள் உடன் பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்துக்காக உருவாக்கப்பட்டவையோ என்று சந்தேகம் எழுவதாக வினவியுள்ளார். 2026இல் அதிமுக ஆட்சியில் தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி ஊழல் நடந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில்தான் திமுக அரசு ஆர்வம் காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் இதனை விசாரித்தால், குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என தெரிவித்துள்ள அன்புமணி, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதோடு மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.