சென்னை: உடற்பயிற்சி கூடத்தில் பெண்ணுக்கு காதல் தொல்லை - ஜிம் மாஸ்டர் கைது!
சென்னை கீழ்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜிம்-க்கு, 30 வயது பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஜிம் பயிற்சியாளரான சவுகார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்பவர் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இதில், இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.
இந்நிலையில், ஜிம் நிர்வாகம் சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை கடந்த நவம்பர் மாதம் வேலையை விட்டு நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சூர்யாவிடம் பேசுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சூர்யா, கடந்த 13 ஆம் தேதி மாலை ஜிம்மிற்குச் சென்று அந்தப் பெண்ணை கீழே அழைத்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
தன்னோடு மீண்டும் பேசவில்லை என்றால் தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனவும், குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவேன் எனவும் சூர்யா அப்பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.