சென்னை | பைனான்சியர் வைத்திருந்த: ரூ.48 லட்சம் பணத்தை திருடிச் சென்ற 4 ஊழியர்கள் - இருவர் கைது
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை போரூர் ஆபீசர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் தேவகுமார் (28) பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம் செல்வ பீட்டர், ரகுபதி, குரு மற்றும் சத்தியகுமார் ஆகிய நான்கு பேர் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்ட நெல்சன், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க முடிவு செய்து அதற்காக 48 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வைத்திருந்தார்.
இதையடுத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் நான்கு பேரும் மாயமாகிவிட்டனர். இது தொடர்பாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் நெல்சன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பீட்டர் மற்றும் ரகுபதி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை போரூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பணத்தை பையுடன் திருடிச் சென்றதை உறுதி செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள குரு மற்றும் சத்தியகுமார் ஆகிய இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.