சென்னை | பால்கனி வழியாக வீட்டினுள் புகுந்து 28 சவரன் தங்க நகைகள் திருட்டு – ஒருவர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை ராயப்பேட்டை முத்தையா இரண்டாவது பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமா (54) - ராமானுஜம் தம்பதியர். ரமா, எல்ஐசி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். ராமானுஜம் துறைமுகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (8ம் தேதி) இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பால்கனி வழியாக வந்த மர்ம நபர், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
புகாரின் பேரில் அங்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வந்தனர். இதையடுத்து ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) பாக்கு ராஜா (37) என்பவரை ஐஸ் ஹவுஸ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கடந்த ஜனவரி மாதம் ஜாம்பஜார் பகுதியில் செல்போன்களை திருடிச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜாவிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த ஐஸ் ஹவுஸ் போலீசார், இந்த சம்பவம் குறித்தும், ராஜாவின் பின்னணி குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.