நண்பனே எதிரியான தருணம்.. காவலாளி அஜித்குமாரை துன்புறுத்த உதவிய நண்பன்.. சிபிஐ அதிர்ச்சி தகவல் !
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் கோவில் காவலாளர் அஜித் குமார் கொலை வழக்கில், சிபிஐ விசாரணை 24வது நாளாகத் தொடர்கிறது. வழக்கில் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஐந்து பேரையும் சிபிஐ இரண்டு நாட்கள் விசாரணைக்கு எடுத்திருந்தது. விசாரணை முடிவில், அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில், சிபிஐ அதிகாரிகள் திருப்புவனத்தில் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் முதற்கட்டமாக, வழக்கில் முக்கிய சாட்சியான சக்திஸ்வரனை அழைத்து, சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரித்தனர்.
முன்னதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரை சித்திரவதை செய்யும் போது மிளகாய்ப்பொடி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, மிளகாய்ப்பொடி எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் போது, மடப்புரம் கோவிலின் கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் பிரவீன் குமார், காவல்துறையினர் கூறியதற்கிணங்க, மிளகாய்ப்பொடியை வாங்கி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.