'கேஸ் வெல்டிங்' மூலம் ஏ.டி.எம் உடைத்து 4 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை

'கேஸ் வெல்டிங்' மூலம் ஏ.டி.எம் உடைத்து 4 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை
'கேஸ் வெல்டிங்' மூலம் ஏ.டி.எம் உடைத்து 4 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை

நாமக்கல் அருகே லட்சுமி விலாஸ் வங்கியின் ஏடிஎம்-ஐ கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 4 லட்சத்து 85 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்-ல் இருந்த அலாரத்தை உடைத்து மிளகாய் பொடி தூவி, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில் மேடு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், சுமார் 8 வருடங்களாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. அதே பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன் என்பவர், ஏ.டி.எம். மையத்தை பராமரிக்கும் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம் போல் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஏ.டி.எம். மைய பராமரிப்பாளர் கணேசன் உடனடியாக புதுசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மோப்ப நாய் சீமா மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் குற்றச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம், கண்காணிப்பு கேமராக்களை துண்டித்து விட்டு, ஏ.டி.எம் மையத்திற்குள் மிளகாய் பொடியை தூவி கேஸ் வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்து அதில் இருந்த 4 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் யாரவது ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com