அசாமுக்கு தப்ப முயன்ற பெங்களூரு போக்சோ குற்றவாளி சென்னையில் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
பெங்களூருவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ குற்றவாளி, அசாம் மாநிலத்திற்கு ரயில் வழியாக தப்ப முயன்றதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீசார் புகைப்பட ஆதாரத்துடன் அனைத்து ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் அனுப்பி வைத்துள்ளனர். தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஹவுரா விரைவு ரயிலில் சோதனையிட்டனர். அப்போது போக்சோ குற்றவாளி பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முஜிபுதின் (45) என்பது தெரியவந்தது. இவர், பெங்களூருவில் கிளாஸ் பிட்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருவதும், அங்கு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ வழக்கில் தொடர்புடைய இவர், அசாம் மாநிலத்திற்கு தப்ப முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போக்சோ குற்றவாளியை சென்னை, ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.