திருவண்ணாமலை | இயற்கை உபாதைக்காக ஏரிக்குச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அருள்குமார். இவருக்கு பரத் (8) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அருள்குமாரின் உறவினர் ராஜா சென்னையில் இருந்து விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து ராஜாவின் மகன் தேவனேஷ் (4). முற்றும் அருள்குமார் மகன் பரத் ஆகிய இருவரும் நேற்று மாலை; வீட்டின் அருகே உள்ள அனாதிமங்கலம் பெரிய ஏரி பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் வீடு திரும்பாததை அறிந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏரி மதகு பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். அவர்கள் அங்கு இல்லாதால், ஏரியில் மூழ்கி இருக்கக் கூடும் என சேத்துப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏரியின் மதகு பகுதியில் இருந்த இரு சிறுவர்களையும் சடலமாக மீட்டனர்.
இதைத் தொடர்ந்து இருவரது சடலத்தையும் சேத்துப்பட்டு காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.