“திட்டம்போட்டு அஜித்தை கொன்றார்கள்” கையெடுத்து கும்பிட்ட குடும்பம்.. அரசுக்கு உருக்கமான கோரிக்கை!
தங்கள் மகன் மேல் சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்று அஜித்குமாரின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது பலரும் புகார் கொடுத்து வருகின்றனர். மறுபுறம், நகை உண்மையில் திருடப்பட்டதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் அஜித்தின் குடும்பத்தார்.
27ம் தேதி நகையை காணோம் என்று நிகிதா புகார் கொடுத்தபோது, அஜித்குமாரை போலீஸார் அழைத்துச் சென்றதாகவும், அடுத்தநாளே மகன் இறந்துவிட்டார் என்று தகவல் வந்ததாகவும் கூறியவர்கள், நிகிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். காரில் இருந்த நகையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு நகையை காணவில்லை என்று நிகிதா நாடகமாடுவதாகவும், நகையை காருக்குள் வைத்துக்கொண்டு யாராவது கார் சாவியை கொடுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அஜித்குமார் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் வீட்டிற்கு வந்து நிகிதா ஆறுதல் கூறவில்லை என்றும், திட்டமிட்டு அஜித்குமாரை கொன்றிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அஜித்குமார் இறந்துவிட்டான்.. திரும்ப வரப்போவதில்லை.. எங்கள் மகன் தவறே செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.. திருடியதால் அவனை 2 நாட்கள் காவலில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். ஊர் மக்கள் பேசுகையில், அஜித் ஒழுக்கமானவர் என்றும், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத இளைஞருக்கு இப்படி ஒரு நிலையா என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தந்தை இல்லாத வீட்டில் தந்தைக்கு தந்தையாக இருந்து குடும்பத்தை பார்த்துக்கொண்ட மூத்த மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில், உரிய நடவடிக்கை எடுத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.