நிகிதாவின் புது ஆடியோ! அஜித்குமாரிடம் 500 ரூபாய் வாக்குவாதம்.. என்ன சொல்ல வருகிறார்?
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் கொலை விவகாரத்தில் புகார் கொடுத்த நிகிதாவின் புது ஆடியோ வெளியாகியுள்ளது. தான் தலைமறைவாக இல்லை என்றும், தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அஜித்குமாரின் கொலை விவகாரத்தில், அவர் மீது புகார் அளித்திருந்த நிகிதாவின் பின்புலம் குறித்த தகவல்கள், அவர் மீது இருக்கும் புகார் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே, ஒட்டுமொத்த பார்வையும் நிகிதா மீது திரும்பும் சூழலில், சரியாக இருப்பவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிறைய பணம் வைத்திருந்தால் விட்டெறிந்துவிட்டு வர வேண்டும் என்றில்லை.. அப்படித்தான் அந்த இளைஞரிடம் 500 ரூபாய், 100 ரூபாய் விவகாரத்திலும் நடந்துகொண்டேன்.. நான் தலைமறைவாக இல்லை.. அஜித்குமார் மரண விவகாரத்தைவிட, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதுபடுத்தி அதனை திசை திருப்புகிறார்கள்.. யார் இந்த நிகிதா. யார் இந்த நிகிதா என்று கேட்கிறார்கள். நான் சாதாரண பிறவிதானே.. என்று கூறியிருக்கிறார்.
மேலும், தான் உயிரோடு இருக்கக்கூடாது என்று பலர் நினைப்பதாகவும், வீட்டில் தான் மட்டுமே நடமாடும் ஆளாக இருப்பதாகவும் கூறியவர், என்னையும் அழித்துவிட்டால் ஆத்திரம் தீர்ந்துவிடும் என்று நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.