சிபிஐ கையில் ஒரிஜினல் ஆதாரம்! 9 மணி நேரம் தொடர்ந்த விசாரணை; அஜித்குமார் வழக்கில் நடப்பதென்ன?
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்தின் கொலை வழக்கை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆதாரத்தின் ஒரிஜினல் வீடியோவை கையில் எடுத்துள்ளனர். சம்மந்தப்பட்ட சாட்சிகளோடு அஜித்குமார் தாக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததோடு, அவர்களிடம் மணிக்கணக்காக துருவித்துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சிபிஐ அதிகாரி டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் கொடுத்ததின் அடிப்படையில், வழக்கின் சாட்சிகள் 5 பேர் மற்றும் காவல்துறை தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர், கடந்த 18ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்த நிலையில், கொலை வழக்கில் 9 ஆவது நாள் விசாரணையாக, அஜித்குமாருடன் அழைத்துச்செல்லப்பட்ட நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் சகோதரர் ஆகிய நால்வருக்கு சம்மன் வழங்கப்பட்டது. இவர்கள் நால்வரும் இரண்டாவது நாளாக மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
மேலும், மடப்புரம் காளியம்மன் கோவில் ஊழியரும், செயல் அலுவலர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றும் பிரபுவிடம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, அஜித்குமார் தாக்கப்படும்போது, அதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரனும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஒரிஜினில் காட்சிளை பெற்ற சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் தலைமையில் 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிபிஐயின் ஒரு குழு கிராஸ் செக் முறையில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே, அஜித்குமார் அழைத்துச்செல்லப்பட்ட இடங்களில் எல்லாம் நேரடியாக ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தின் நேரடி சாட்சிகளான 6 பேரிடமும் 9மணி நேரத்திற்கு துருவித்துருவி விசாரணை நடத்தினர். இப்படியாக, அஜித்குமார் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது.