
சொத்து தகராறு காரணமாக சொந்த வீட்டின் மீதே இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் அவரது சித்தப்பா காயம் அடைந்துள்ளார். வெடிக்காத நான்கு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெரும்பாக்கம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகன் அருண்(எ) அருண் குமார்(25), இவர் அம்பத்தூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
பெரும்பாக்கத்தில் உள்ள சொத்து ஒன்றை பன்னீர் செல்வம் விற்றதில் பங்கு கேட்டும், மேலும் இருக்கும் அரை கிரவுண்ட் இடத்தை விற்று 5 லட்சம் ரூபாய் பணத்தை தனக்கு கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு வந்துள்ளார்.
இதில் தந்தை, மகன் இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அருண்குமார் கையில் வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டில், ஒரு நாட்டு வெடிகுண்டை வீட்டை நோக்கி வீசியுள்ளார். இதில் வீட்டில் இருந்த அருணின் சித்தப்பா வெற்றி வேந்தனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. வீட்டின் முன் பகுதி உள்ளிட்ட சில பகுதிகள் சேதமானது.
நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அருண் தப்பியோடி விட்டார். அவருடன் வந்த ஒன்றுவிட்ட சகோதரன் பிரவீனை பெரும்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், வெடிகுண்டு நிபுணர்கள் வருகை புரிந்து வெடிக்காத நான்கு நாட்டு குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
பெரும்பாக்கம் காவல்துறையினர் தப்பியோடிய அருண்குமாரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த வீட்டின் மீதே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.