கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.. துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்! பிடிபட்ட நடிகரின் கார் ஓட்டுநர்!
செய்தியாளர் - அன்பரசன்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர், நடிகையின் வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
என்ன நடந்தது?
ஹைதரபாத்தை சேர்ந்த 30 வயதான துணை நடிகையொருவர், தன் கணவரை பிரிந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது உறவினர் வேலை சம்மந்தமாக ஹைதரபாத்திற்கு சென்ற நிலையில், அந்த துணை நடிகை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு அவர் தன் அறையில் இருந்த போது, திடீரென பின்புறமாக வந்த 6 பேர் அவர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ஒருவர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றதாக கூறப்படுகிறது. அச்சயமத்தில் மற்ற ஐவரும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
விசாரணையில் சிக்கிய 6 நபர்கள்!
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த துணை நடிகை, இன்று அதிகாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தது துணை நடிகையின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகேசன் என்பதும், அதற்கு உடந்தையாக அவரது நண்பர்கள் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த முருகேசன் (27), செங்கோட்டையை சேர்ந்த கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பிராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளி பிரபல நடிகர் ஒருவரின் கார் ஓட்டுநர்!
கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசன் என்பவர், பிரபல நடிகர் ஒருவரின் கார் ஓட்டுனர் என்பதும் தெரியவந்தது.
நேற்று முருகேசனின் பிறந்த நாள் என்பதால் அவர் தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது விருந்து கொடுத்துள்ளார். மதுபோதையில் பின் வழியாக துணை நடிகையின் வீட்டிற்கு சென்று, தன் நண்பர்கள் உதவியுடன் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் முருகேசன்.
இச்சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.