சென்னை | ஓஜி கஞ்சா விற்பனை., முக்கிய புள்ளிகள் கைது.. சப்ளையர் யார்? வெளியான பகீர் பின்னணி
போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சர்புதீன், நடிகர் சிம்புவின் மேலாளராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 27.5 லட்சம் பணம் அதிமுக வியூக அமைப்பாளர் ஹரியின் பணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுகவின் சமூக ஊடக மேலாண்மைப் பணியாளர்கள் சாய் மற்றும் ஹரி மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
கஞ்சா விற்பனை - வெளியான பகீர் பின்னணி
சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக தகவல் அறிந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தியானேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த சர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு விலையுயர்ந்த ஓ.ஜி கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து 10 கிராம் ஓ.ஜி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ. 27.5 லட்சம், சொகுசு கார், 8 செல்போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கைதான 3 நபர்களும் வெவ்வேறு நபர்களுக்கு ஓ.ஜி கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சிம்பு மேலாளர்!
கைது செய்யப்பட்ட சர்புதின் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர், நடிகர் சிம்புவின் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும், கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்’ என்ற படத்தின் இணை தயாரிப்பாளர் எனவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சர்புதின் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட. ரூ. 27.5 லட்சம் பணம் அதிமுகவில் வியூக அமைப்பாளரான ஹரி என்பவருடையது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வீட்டு பார்டியில் கஞ்சா...
இதனையடுத்து, அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மைப் பணியாற்றும் பிரமன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரை நேற்று மாலை அலுவலகத்திற்குள் சென்று அழைத்து வந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, போதைப்பொருள் விற்பனையில் சாய் மற்றும் ஹரி ஆகியோர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சர்புதீனின் வீட்டிற்கு வரக்கூடிய 18 பேர் கொண்ட பட்டியலை வைத்து விசாரணையை போலீசார் தீவிரமாக்கியுள்ளனர். சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் சர்புதீன் வீட்டு பார்டியில் பங்கேற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பார்ட்டியில் மெத் மற்றும் கொக்கைன், OG கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்தது.
இதில் சப்ளையர் யார்? எங்கு இருந்து வாங்கி வரப்படுகிறது என போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணித்தப்போது ஞானேஸ்வரன் என்பவர் மூலமாக பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து அவர் மூலமாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலே சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பல இளம் தயாரிப்பாளர்கள், இளம் நடிகர்கள், சினிமா துறையில் உள்ள பெண்களும் அடுத்தடுத்து சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் குவிந்த அதிமுகவினர்..
இந்த நிலையில், அதிமுக வியூக அமைப்பாளர்களான சாய் மற்றும் ஹரி ஆகியோரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதால் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அதிமுகவினர் நேற்று இரவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அரும்பாக்கம் காவல் நிலையம் முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தி. நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், ராஜேஷ் உட்பட 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர் .
இந்த நிலையில், புதியதலைமுறை சேனலுக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பாலமுருகன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், திமுக அரசு வேண்டுமென்றே போதைப்பொருள் வழக்குகளில் அதிமுகவினரை சிக்க வைத்து வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அதிமுகவின் தேர்தல் அமைப்பாளர்களான ஹரி மற்றும் சாய் ஆகிய இருவரும் அப்பாவிகள் எனவும் திட்டமிட்டு திமுக அரசு தங்களை போதை பொருள் விவகாரத்தில் கைது செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், நேற்று நள்ளிரவு மறு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறி அதிமுக தேர்தல் வியூக அமைப்பாளர்கள் ஹரி மற்றும் சாய்க்கு சம்மன் அளித்து காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

