சென்னை| குற்றவாளி கூண்டில் நின்றபடி இன்ஸ்டா ரீல்.. இளைஞர், 17 வயது சிறுவன் கைது!
சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபோது வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த 24 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வீடியோ வைரலாகி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்ததால் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு இகைஞர் நீதிமன்ற கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்சாக பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ 3.62 லட்சம் பார்வைகளை கடந்து வைரலான நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்திருப்பதாக கூறி பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்..
இளைஞர் உட்பட 17 வயது சிறுவன் கைது..
வீடியோ காட்சிகளை வைத்து உயர்நீதிமன்ற வளாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணையில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் பரத் என்ற இளைனஞர் கடந்த 16ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரான போது, இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பிராட்வே பகுதியைச் சேர்ந்த பரத் (24) மற்றும் வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த உயர் நீதிமன்ற போலீசார் பரத்தை சிறையிலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனை கூர் நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

