ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. 5 பேரை தேடி வரும் காவலர்கள்.
4 arrested
4 arrestedpt

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக சிலர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர், கடந்த 25ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் “ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து, தன்னிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ உள்ளதாகவும், தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவேன். தனது சார்பில் திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவார். பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால், விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்யக்கூட தயங்க மாட்டோம்” என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தனர்.

நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்தேன். பின்னர் இதுதொடர்பாக செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் அமுர்த விஜயகுமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர், என்னை தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டுமென கூறியதாக கூறினார்கள்.

அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும், வீணாக ரவுடிகளிடம் பிரச்னை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும், அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவர்கள் எனவும், எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவியாளர் செந்திலின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றனர். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம். எனவே, ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக மடத்தில் இருப்பவர்களை மிரட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

4 arrested
மக்களவை தேர்தல் 2024 | 4 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்தது திமுக!

இதற்கிடையே, இந்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தொழிலதிபர் குடியரசு, ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் மயிலாடுதுறை கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், அமுர்த விஜயகுமார், தருமபுரம் ஆதீன பணிவிடை செந்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

இதையடுத்து, தருமபுரம் ஆதீனம் சார்பில் வெளியான பத்திரிகை செய்தி வெளியீட்டில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம்.

காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4 arrested
3 மாத குழந்தைக்கு இருந்த அரியவகை புற்றுநோய்.. மொபைல் Flash Light மூலம் கண்டறிந்த தாய்! என்ன நடந்தது?

இதனிடையே, செந்தில் என்பவரது பெயர் புகாரில் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com