சீர்காழி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை சாக்கு மூட்டையில் அள்ளிச் சென்ற 3 பேர் கைது
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதன் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமை காவலர் ஸ்டாலின் ஆகியோர் கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பியோடிய நிலையில், அங்கே பணத்தை சாக்கு மூட்டையிலும் வாளியிலும் அள்ளிக் கொண்டிருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த கொளஞ்சி மற்றும் அவரது சகோதரன் முத்து என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மூட்டை மூட்டையாக சில்லரை காசுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய நபரை தேடிவந்த நிலையில், விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இலக்கியன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கோயில் உண்டியலை உடைத்து தப்பியோடிய மூன்றவது நபர் அவர்தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.