சென்னை: போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்க முயற்சி - இருவர் கைது
செய்தியாளர்: சுரேஷ்குமார்
சென்னை சைதாப்பேட்டையில் சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சென்னை, திருவான்மியூர் பகுதிக்குட்பட்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள சுமார் 23 கிரவுண்ட் இடம் சம்பந்தமாக ஆவணங்களை போலியாக தயார் செய்து விற்பனை செய்ய சிலர் முயன்றனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “சம்பந்தப்பட்ட அந்த 23 கிரவுண்ட் நிலத்தை அருண் மல்கோத்ரா என்பவர் ஹரிஷ் மல்கோத்ரா என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அந்த ஆவணங்களை தயார் செய்துள்ளார். இதன் மாதிரி படிவத்தை சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கமலக்கண்ணன் என்பவர் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சார்பதிவாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து, அப்பிரிவின் காவல் ஆய்வாளர் ஸ்ரீஜாராணி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியது. தொடர்ந்து இந்த வழக்கில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக கமலக்கண்ணனை என்பவர் கடந்த 3ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து கமலக்கண்ணனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில், போலியான ஆவணங்களை தயார் செய்தது படப்பையை சேர்ந்த சுரேஷ்குமார், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த யுவராஜ் சௌத்ரி மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜி ஆகியோர் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்த அந்த மூன்று பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் மற்றும் யுவராஜ் சௌத்ரி ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போலி ஆவணத்தை கோடம்பாக்கத்தில் உள்ள ராசி கிராபிக்ஸ் என்ற கடையில் தயாரித்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி ஆவணங்கள் தயார் செய்வதற்காக பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், போலியான ரப்பர் ஸ்டாம்புகள், போலி வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் போலி அரசு முத்திரைகள், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வரும் கும்பலை காவல்துறை பிடித்துள்ளதுடன், போலி ஆவணங்கள் தயாரிக்க அவர்கள் பயன்படுத்திய கடையையும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வழக்கு மேலும் வேகம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.