கொரோனா வைரஸ்
ஒமிக்ரான் அச்சுறுத்தல்: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்
ஒமிக்ரான் அச்சுறுத்தல்: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்
ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில், நியூசிலாந்து, பங்களாதேஷ், சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் வருகை சம்பந்தமான விபரங்களை எடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் 60 முதல் 70 சதவீதம் இருக்கும் நிலையில் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
நேற்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிக பாதிப்புள்ள 11 நாடுகளிலிருந்து 1,013 பயணிகளும், குறைந்த பாதிப்புள்ள நாடுகளிலிருந்து 169 பயணிகளும் வருகை தந்தனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் மொத்தமாக அதிக பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து 1,676 பயணிகள் வருகை தந்தனர் அவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எந்த வகையான உருமாறிய வைரஸ் பரவியுள்ளது என்பது குறித்த ஆய்வும் உடனடியாக எடுக்கப்படுகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல ரேபிட் டெஸ்ட் எடுப்பதற்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.