`தூக்கம் கண்ணில் வரவில்லை; சொப்பனம் காண வழியில்லை!’- 52% இந்தியர்களின் அவலநிலை

`தூக்கம் கண்ணில் வரவில்லை; சொப்பனம் காண வழியில்லை!’- 52% இந்தியர்களின் அவலநிலை
`தூக்கம் கண்ணில் வரவில்லை; சொப்பனம் காண வழியில்லை!’- 52% இந்தியர்களின் அவலநிலை

கொரோனாவுக்குப் பின் 52% இந்தியர்களின் தூக்க நேரம் முற்றிலுமாக மாறியிருப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

கொரோனா நம் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றி உள்ளது. இப்போதெல்லாம் பலருக்கும் மாஸ்க் போடாமல் இருந்தால், உள்ளுக்குள் `அட ஏதோ ஒன்று குறையுதே’ என்று உணர்வு ஏற்பட்டு வருகின்றது. அதுவும் அந்த நேரத்தில் செக்கிங் அதிகாரிகள் யாரையாவது பார்த்துவிட்டால், `இப்போ அவங்க கேப்பாங்களே... என்ன பதில் சொல்றது?’ என படபடக்க ஆரம்பித்துவிடுகிறோம். அந்த அளவுக்கு மாஸ்க் நம் வாழ்வில் கலந்துவிட்டது. மாஸ்க் மட்டுமன்றி, வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரமும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ளது.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தினால், பலர் மத்தியிலும் தூக்க சிக்கல்கள் உருவாகியிருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. `லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக அமைப்பு சார்பாக தேசிய அளவில் செய்யப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவின் சுமார் 322 மாவட்டங்களில் 32,000 பேர் பங்குபெற்றிருந்திருக்கின்றனர். சுமார் 61% ஆண்களும், 39% பெண்களும் பங்குபெற்ற அந்த ஆய்வில் முக்கிய கேள்வியாக, “இரவில் உங்களுக்கு எத்தனை மணி நேரம் தடையில்லாத தூக்கம் கிடைக்கிறது?" என்று கேட்கப்பட்டிருந்திருக்கிறது.

சுமார் 11,541 பேர் கோவிட் காலத்தினால் தங்களுக்கு தூக்க சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்களாம். அதாவது இரண்டில் ஒரு இந்தியர், அன்றாடம் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தடையில்லாமல் இரவில் தூங்குகின்றார்கள். அதேபோல 4-ல் ஒருவர், 4 மணி நேரத்துக்கும் குறைவாகவே தடையில்லாமல் தூங்குகின்றார்கள்.

பலரும், கொரோனாவுக்குப் பின்னரே தங்களுக்கு அதிக தடையுள்ள தூக்கம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக பெரியவர்களுக்கு அன்றாடம் 8 மணி நேர தடையில்லா தூக்கம் இருக்க வேண்டும் என்றும், அதுமட்டுமே ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் நீடித்த மகிழ்ச்சியான ஆயுளுக்கு உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறைவான நேரம் தூங்குவதென்பது, இதயம் சார்ந்த பிரச்னைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி பார்க்கையில், இந்த ஆய்வு முடிவு மிகவும் அச்சுறுத்தல் தருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த ஆய்வின் முழு விவரம் இங்கே - LocalCircles

`இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை... நான் என்ன செய்ய?’ என்பவர்கள், கீழ்க்காணும் 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் தூக்க நேரம் அதிகமாகும் - தடையில்லா தூக்கமும் கிடைக்கும்.!

* படுக்கைக்கு செல்லும் நேரம், படுக்கையை விட்டு எழும் நேரம் - இவை மாறிக்கொண்டே இருந்தால், உடல் குழப்பமடையத் தொடங்கிவிடும். ஆகவே இதை முன்கூட்டியே நிர்ணயித்துக்கொள்ளுங்கள். சரியாக அந்த நேரத்துக்கு தூங்க சென்றுவிட்டு, எழுந்துவிடுங்கள். இதன்மூலம் உங்கள் உடல் அதற்கு பழக்கப்பட்டு, முறையாக தூக்கமும் விழிப்பும் வரும்.

* படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்தே மொபைல் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். அரை மணி நேரத்துக்கு முன் இருந்தே, புற வெளிச்சத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள். படுக்கைக்கு சென்றவுடன் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிடுங்கள். அடர் இருட்டில் தூங்கும்போது, தூக்கம் தடையின்றி இருக்கும்.

* படுக்கைக்கு செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். சாப்பிடும்போது கஃபைன் உள்ள பானங்கள் அருந்துவது அல்லது வேறு செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.

* பகலில் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்துவிடுங்கள். அதேபோல அன்றாட வாழ்வில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கபைன் (டீ, காபி) அளவை குறைத்துக்கொள்ளுங்கள். மது அருந்துவதையும், சிகரெட் புகைப்பதையும் முடிந்தவரை முழுமையாக தவிர்ந்துவிடுங்கள்.

* அன்றாடம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com