”யாரோ தொடங்கி வச்ச பகை.. நாம ஏன்?” - ’பைசன்’ உடைத்து பேசிய அரசியல் என்ன?
மிகவும் சிக்கலான பதட்டத்தை உருவாக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்ட கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு கதைக்களத்தை எடுத்து கையாண்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
மிகவும் சிக்கலான பதட்டத்தை உருவாக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்ட கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு கதைக்களத்தை எடுத்து கையாண்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பைசன் படத்தில் நிறைய அரசியல் பேசப்பட்டிருக்கும். ஆனால், முக்கியமான இரு கதாபாத்திரங்களின் வழியாகவே தான் சொல்ல நினைத்த கருத்தை சொன்னதுதான் ஒரு இயக்குநராக மாரி செல்வராஜின் தனித்தன்மை தெரிகிறது.
படத்தின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய அரசியல் கருத்தை முன் வைத்திருக்கிறார் மாரி. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மூலமாக நீண்ட காலமாக ஒரு பகை உணர்ச்சி வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு போட்டி என்பதை தாண்டி தேவையற்ற கருத்துக்களை புகுத்தி கடந்த 20-30 வருடங்களில் இருநாடுகளும் சேர்ந்து விளையாடுவதே சிக்கலாக மாறிவிட்ட காலம் இது. அந்த வகையில் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதும் கபடி போட்டியை வைத்து அந்த அரசியலை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார் மாரி. இறுதி வரும் முத்தாய்ப்பான காட்சி அதற்கு சான்று. முக்கியமான கடைசி ரைய்டில் உனக்கு பதில் அவனை ஏன் களமிறக்குன, ஒரே ஒரு ரைடு தானே இருக்கு என கேப்டனை நோக்கி கோச் கேட்கும் போது அந்த கேப்டன் சொல்வார், “உங்களுக்கும் எனக்கும் இது இந்தியா பாகிஸ்தான் போட்டி என்ற அழுத்தம் இருக்கு. ஆனா இந்த போட்டியில் ஜெயிக்கணும் என்ற வெறி மட்டும்தான் பைசன் கிட்ட இருக்கு” என்று. வெளிப்புற அரசியல் அழுத்தங்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் தற்போது வெளிப்பட்டு வருவதை தாண்டி, யாருமே அதனை குறித்து கேள்வி கேட்க முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. கேள்வி எழுப்பினால் தேசவிரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சமும் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையார் இடையிலான மோதலால் தென் மாவட்டங்கள் எண்ணற்ற கொலைகள் நடந்ததை பத்திரிக்கை செய்திகள் பதிவு செய்தே வந்துள்ளன. மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டே வந்துள்ளனர். இதுக்கு ஒரு முடிவே இல்லையா என பலரையும் நினைக்கவைத்தது. அதனால் தான், பசுபதி பாண்டியன் ஆக பாண்டிய ராஜா கதாபாத்திரத்தில் அமீரும், வெங்கடேச பண்ணையார் ஆக கந்தசாமி கேரக்டரில் லால்-ம் அட்டகாசமாக நடித்து இருக்கிறார்கள். இரண்டு சமூக பின்னணியை கொண்ட இரு தரப்பினரின் கதை எடுத்து இரு தரப்பிலும் உள்ள நல்லது, கெட்டது என இரண்டையும் வைத்து பேசியிருக்கிறார் மாரி. அதில் இரண்டு வசனங்கள் மிகவும் முக்கியமானது.
கந்தசாமி கதாபாத்திரம் வாயிலாக, “சில விசயத்தை விட்ரலாம்ன்னு நினைச்சாலும் முடியலடே.. அந்த கால பகை. நானே நினைச்சாலும் விடமுடியாது.. அதான் நெசம். உன் திறமையை மட்டும் தான் நான் பாத்து எங்க டீம்ல ஆடவச்சேன். இப்ப சூழல் சரியில்லை. நான் தாழையூத்து பேப்பர் மில் டீம்ல பேசிட்டேன். மறுக்காம அங்க போய் விளையாடு. நாம சந்திக்கிறது இதான் கடைசியா கூட இருக்கலாம். கபடில நீ இன்னும் ரொம்ப உயரம் போகனும். அந்த செய்தியை நான் கேட்டா போதும்..” என்று லால் பேசும் காட்சி மிக அழுத்தமானது. தவிர்க்க முடியாமல் இந்த பகை போய்க்கொண்டே இருப்பதை அது எடுத்துக் காட்டியது. அந்த பகை முடிவுக்கு வர வேண்டும் என்பதை அந்த கலைப் படைப்பு நமக்கு எடுத்துக் காட்டியது.
பாண்டிய ராஜா கதாபாத்திரத்தின் மூலமாக, “சாதி பெருமை பேசுறவன், குடும்ப பெருமை பேசுறவனெல்லாம்.... முதல்லயே அடிச்சு ஒடச்சிறனும்,
இப்பவே நான் ஏன் கத்தி எடுத்தேன் என்பதையே பாதி பேரு மறந்துட்டானுங்க..! இங்க எவனும் மேலேயும் கிடையாது கீழயும் கிடையாது எல்லாரும் சமம் னு தான் சண்டை போட ஆரம்பிச்சோம்...அதையும் எல்லாரும் மறந்துட்டானுங்க...” என்று அமீர் பேசும் காட்சி அருமையாக சொந்த சாதியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவது போல் அமைந்திருக்கும்!
பிடி ஆசிரியரின் கதாபாத்திரம் சாதி கடந்து பழக வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இது எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டியது. குறிப்பாக சொந்த ஜாதிக்குள்ளாவே சின்ன சின்ன பிரச்னைகளெல்லாம் எப்படி பெரிய அளவில் வெடிக்கிறது, பைசனின் கபடி ஆசைக்கே சிக்கல் ஏற்படுத்தும் அளவிற்கு முட்டுக்கட்டையாகிறது. இப்படி நுணுக்கமாக பல விஷயங்களை பேசியிருகிறார்.